
இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது தொடர்பான சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவசரகால தயார்நிலை குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, எரிபொருளைப் பெறுவதற்கும், போலியான பதிவுச் செயல்பாட்டின் போதும், ஒருவரின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களை (தொலைபேசி எண்கள், வாகனப் பதிவு எண்கள், அடையாள அட்டை எண்கள் போன்றவை) திருடுவதற்கு முயற்சிக்கப்படலாம்.
திருடப்பட்ட தகவல்கள் சட்டவிரோத செயல்களுக்கும், சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படும், என இலங்கை கணினி அவசரகால தயார் நிலை குழு எச்சரித்துள்ளது.
