
அரசியல் ஆதிக்கம் அதிகரித்து, வளங்கள் சூறையாடப்படுகின்றது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்பட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், செயலாளருமான பி.என்.எம். ஜயவிக்கிரம தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒரு வருட பூர்த்தி விழா நிகழ்வு திருகோணமலை நிலாவெளியில் இன்று நடைபெற்ற போதே பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
திருகோணமலை மாவட்டத்தில் வளங்கள் அதிகமாக காணப்படுகின்றது, இந்த வளங்களை ஊடகங்கள் மூலமாகவே தடுக்க முடியும்.
ஊடக செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாகவும், மேலும் திட்டமிடல் செயற்பாடுகள் உடையதாகவும் அமைய வேண்டும்.
அதே போன்று சேருவில மகாவலி கங்கையில் மணல் அகழ்வு தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
மணல் அகழ்வினால் பாரிய குழிகள் ஏற்பட்டு வருவதாகவும், அதனை நிரப்புவதற்கு பாரிய நிதி தேவைப்படும் எனவே அதனை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
ஊடகவியலாளர்களுக்கு என்னால் முடியுமான உதவிகளை எனது நிர்வாக காலத்தில் வழங்குவேன்.
மேலும் வெளி மாவட்ட அரசியல் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு இல்லையேல் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டே இருக்கும்இஉண்மைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.
ஆரம்ப காலம் போன்று இல்லை ஊடப் பணிகள், தற்போதைய செயற்பாடுகள் நவீன பாதையில் சென்று கொண்டிருக்கின்றன அதற்கு ஏற்றால் போன்று நாம் மாற வேண்டும், என்றார்.
