சொந்த பாவனைக்காக எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்கள் : மக்கள் தொடர்ந்தும் வீதியில்

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்டம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை  மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் எரிபொருள் மற்றும் எரிவாயு களை பெற்று கொள்வதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மன்னார் முகவர் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி லாப் எரிவாயுக்கள் மக்களுக்கு வழங்காமல் உரிமையாளர் பதுக்கி வைத்துள்ளதாக மக்கள் குறித்த விற்பனை முகவர் நிலையத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலையீட்டின் காரணமாக சொந்த பாவனைக்கு என்ற பெயரில் வழங்கப்படாமல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 21 எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அதே நேரம், மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிவாயு இன்மையால் எரிவாயு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் பெறுவதற்கு காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அத்துடன், பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் திட்டமிட்ட முறையில் நடை முறைப்படுத்தப்படாமையினால் எரிவாயு மற்றும் எரிபொருள் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் செயற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.