தாயை கடத்தி வைத்து மகளிடம் பணம் கேட்ட நால்வர் கைது

வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரை கடத்திச் சென்று பணம் கேட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

குறித்த நபர்கள் பெண் ஒருவரை கடத்திச் சென்று வீடொன்றில் மறைத்து வைத்து விட்டு, குறித்த பெண்ணின் மகளுக்கு அழைப்பை ஏறபடுத்தி அவரது தாயாரை விடுவிக்க வேண்டுமென்றால் ஐந்து இலட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.

மேலும் தாம் கேட்ட ஐந்து இலட்சத்தை தராவிட்டால் கடத்தப்பட்டுள்ள பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, கடத்தப்பட்ட பெண்ணின் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, பணத்தை பெற வருமாறு குறித்த சந்தேக நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணின் மகள் மூலமாக அழைக்கப்பட்டனர்.

பின்னர் பணத்தை பெற குறித்த சந்தேக நபர்கள் வந்த வேளை சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட பெண்ணையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த 26 மற்றும் 49 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.