
தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு : நீண்டு கொண்டே போகும் வரிசை
-கிளிநொச்சி நிருபர்-
வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலையில், இன்று திங்கட்கிழமை பெற்றோல் விநியோகம் இடம் பெற்ற நிலையிலேயே, இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பெற்றோல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்தது.
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலகம் ஊடாக பதிவு செய்யப்பட்ட பெற்றோல் வாகனங்களுக்குரிய அட்டைக்கு ரூபாய் 2500 இற்கு பெற்றோல் வழங்கப்பட்டதுடன், அவ்வாறு பிரதேசத்திற்கு வெளியே இருந்து செல்கின்ற அல்லது பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூபாய் 500க்கு மட்டுமே பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது.
இங்கும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தே பெற்றோல் நிரப்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பபுலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு ரூபா 1500 இற்கும், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூபா ஆயிரத்துக்கு மட்டுமே பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
இங்கும் பெற்றோல் நிரப்ப மிக நீண்ட வரிசை காணப்பட்டது.
இதேவேளை, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட நேரமாக மிக நீண்ட வரிசையில் டீசல் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் காத்திருந்தத நிலையில், பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை, வடமராட்சியில் நெல்லியடி,மந்திகை, கிராம கோடு, பருத்தித்துறை உட்பட்ட அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு 30000 லீற்றர் டீசல் வந்திறங்கியமை குறிப்பிடத்தக்கது.
