நாளை மறுதினம் முதல் புதிய ரயில் சேவை
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை மறுதினம் புதன்கிழமை முதல் புதிய ரயில் மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ரயில் சேவை ஒன்று நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளாந்தம் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இந்த ரயில் காலை 8.14 அளவில் கண்டியை சென்றைடையும். மீண்டும் மாலை 4.50 அளவில் கண்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களனி வெளிரயில் மார்க்கத்தில் புதிய ரயில் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அவிசாவளை – வக ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.20 அளவில் புறப்படும் அலுவலக ரயில் காலை 8.12 அளவில் கொழும்பு கோட்டையை வந்தடையும்.
மாலை 4 மணியளவில் கொழும்பில் கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் 5.43 அளவில் அவிசாவளை – வக ரயில் நிலையத்தை சென்றடையும்.
இதேவேளை, வார இறுதியில் விசேட ரயில் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
