
இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகினார்
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ பதவி விலகியுள்ளார்.
இலங்கையில் இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எம்.எம்.சீ. பெர்டினண்டோ, கோப் குழுவில் தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடியால், ஜனாதிபதி ஊடாக இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இது உண்மையில்லை என்று ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து, தாம் மன உளைச்சல் காரணமாக அந்த கருத்தை வெளியிட்டதாகவும், அதில் உண்மையில்லை என்றும், அதற்கான மன்னிப்பு கோருவதாகவும் எம்.எம்.சீ. பெர்டினண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையிலேயே அவர் தற்போது பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்படவுள்ளதாகவும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.

