
வீதியில் வரிசையாக அடுக்கி சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்கள்
-நுவரெலியா நிருபர்-
சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பிரதான நகர மக்கள் கடந்த ஐந்து நாட்களாக வெற்று எரிவாயு சிலிண்டர்களை சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் அடுக்கி வைத்து சென்றுள்ளனர்.
நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளமையால் பாதசாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், நுவரெலியா பிரதான நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், பொது மக்கள் என நடைபாதையில் நீண்ட வரிசையில் வைத்து ஒன்றுடன் ஒன்றை இணைத்து கயிறு மற்றும் இரும்பு சங்கிலிகளை பயன்படுத்தி கட்டி வைத்துள்ளனர்.
இதனால் பாடசாலை மாணவர்கள், முதியோர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நுவரெலியா பிரதான நகருக்கு போதுமானளவு சமையல் எரிவாயு வராததால் இந்த நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
