சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற 91 பேர் கடற்படையினரால் மீட்பு

கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் – மாரவில பிரதேசத்திலும், மேற்கு கடற்பரப்பிலும் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மாரவில பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்ட போது, கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், 1 சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள், குறித்த பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான் மற்றும் கார் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மற்றும் சிலாபம் கடற்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகொன்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மாரவிலவில் கைது செய்யப்பட்ட, யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள், விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்,

சிலாபம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட , நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள், கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.