நிதி மோசடி செய்துவிட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த தம்பதி : தமிழக முதலமைச்சரிடம் உதவி கோரும் பாதிக்கப்பட்டவர்கள்

-கல்முனை நிருபர்-

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன பிரதானி ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோரை, இந்திய தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் சார்பில் தலைவர், செயலாளர், பிரதித்தலைவர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை மாலை கல்முனை தனியார் மண்டபத்தில் ஊடகங்களிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட 1400 குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியினால் நிர்கதியாகியுள்ளது.

குருவி சேர்ப்பது போன்று சேமித்த பணம், வீடுகட்ட சேமித்த பணம், அங்கவீனர்களின் பணம் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோர் தொடர்பில் இந்தியாவில் நடைபெற்று வந்த நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் 95 சதவீத அளவில் முடிந்துள்ளதாக அறிகிறோம்.

சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

உங்களின் தந்தை கலைஞரின் வழியில் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை கிட்டும் வகையில் இது தொடர்பில் நேரடியாக தலையிட்டு இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மட்டக்களப்பு, பொத்துவில்,  கல்முனை, சம்மாந்துறை நீதிமன்றங்களில் இவர்களுக்கு எதிராக 100 க்கு மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

கடந்த 2020.03.26 அன்று பாராளுமன்றத்தில் கூட இது தொடர்பில் பேசப்பட்டது. 2020.11.08 அன்று பொலிஸ் ஊடக பேச்சாளர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

சர்வதேச பொலிஸாரின் அறிவித்தாலும் வெளியிடப்பட்டுள்ளது, இப்படியான இந்த மோசடி விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்.

இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சற்று ஆறுதலாளிக்கும் விடயமாக அமையும்.

இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் கடுமையான கஷ்டங்களிலும், மன உளைச்சலிலும் இருக்கின்றோம், என்றனர்.