
சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய்
-கல்முனை நிருபர்-
மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை – பெரியநீலாவணை- மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான எம்.ஆர். பஸீரா ( 54 வயது) என்ற பெண் கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்தார்.
பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதேச பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் உதவி செய்யுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தன.
இதனை அடுத்து பிரதேச மக்களும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை 4.00 மணி அளவில் மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
