தமிழ்நாட்டு முதல்வரிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள கோரிக்கை

-பதுளை நிருபர்-

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணை போக வேண்டாம், என தமிழ்நாட்டு முதல்வரிடம் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் T.V.சென்னன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையில் அவர்,

கச்சைத்தீவை மீளப்பெறுமாறு இந்திய பிரதமரிடம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க‌.ஸ்டாலின் நேற்று கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அன்று இருந்த இலங்கை தலைவர் J.R.ஜெயவர்தனவும், இந்திய பிரதமர் ரஜிவ்காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே கச்சைத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

அதேபோல் இலங்கையின் 13 ம் திருத்தசட்டம் இலங்கை சிறுபான்மையின மக்களுக்காக செய்துகொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இருப்பினும் இலங்கையில் பெரும்பான்மை இன தலைவர்களினால் இந்த 13 ம் சரத்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை சிறுபான்மையின தலைவர்களும் தமிழ் மக்களும் இந்தியாவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், நீங்கள் கச்சைத்தீவை மீள பெற வேண்டும் என இந்திய பிரதமரிடம் கூறுவதனால், இலங்கை பெரும்பான்மை இன தலைவர்களினால் இந்த ஒப்பந்தம் மேலும் தட்டிக் கழிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே, இலங்கை மக்களுக்கு உங்களால் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணை போக வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.