ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று

நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.  3,844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் நடைபெறவுள்ளது.

இந்தமுறை பரீட்சைக்கு 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும், 110,367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்களாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

கொவிட்-19 தொற்றுறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர்.

இந்த நிலையில், பரீட்சைக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சைக்குரிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர்களை வீதியில் கண்டால் வாகனத்தில் ஏற்றிச் சென்று பரீட்சை நிலையங்களில் விடுமாறும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் தினங்களில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் மாணவர்கள் நேர காலத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளை உரிய வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தடையின்றி அந்த சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.