சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம்
எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளமையால், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும்படி, லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், சீரற்ற வானிலை காரணமாக முழுமையாக தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனால், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
தற்போது வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளை வியாழக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த இரண்டு கப்பல்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் எரிவாயு 5 நாட்களுக்குப் போதுமானதாகும், என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
