பொத்துவில் – முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி திருகோணமலையில் இருந்து தொடர்கிறது
-வாழைச்சேனை நிருபர்-
இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி, இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்டம் சிவன்கோவில் முன்றலில் இருந்து “வீழ்ந்த இடத்தில் எழுவோம்” என்ற தலைப்பில் ஆரம்பமாகியது.
இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
சிவன்கோவில் முன்றலில் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு பரிமாறி, 2009 இறுதி யுத்த காலப்பகுதியில் முள்ளி வாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக நினைவு கூரப்பட்டது.
இந்நிகழ்வில், மதகுருமார்கள், தாயக ஜனநாயக கட்சி தலைவர் வி.நிமலன், சிரேஸ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேரணியினை ஆரம்பித்து வைத்தனர்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரணியானது, அனுராதபுர சந்தி ஊடாக, கன்னியா சென்றடைந்து, அங்கிருந்து வவுனியா, நெடுங்கேணி, செட்டிக்குளம் வீதி வழியாக முல்லைத் தீவை சென்றடையும்.
தொடர்ந்து, நாளை புதன்கிழமை வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலை சென்றடைந்து நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குகொள்ளும்.
இதேவேளை, நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது, வாழைச்சேனை, வாகரை, மூதூர் வீதி வழியாக மாலை 6 மணிக்கு திருகோணமலையை சென்றடைந்தது.
“முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 12.5.2022 ஆம் திகதி தொடக்கம் கிழக்கில் பல்வேறு இடங்களில் நினைவு கூரப்பட்டு வரும்வேளை, இப் பேரணியானது பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப்பேரணியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.