
ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை
-மன்னார் நிருபர்-
நாடளாவிய ரீதியில் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உடனடியாக பதவி விலக கோரியும் சுமார் 3000 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஹர்த்தால் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களும் பூரண ஆதரவு வழங்கியுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் தனியார் பேருந்து சேவைகளும் இயங்கவில்லை.
அதே நேரம் பொது இடங்களில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது.
பாடசாலைகள் வழமை போல் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டது.
ஆசிரியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன் பாடசாலை வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும் தவிர்த்துள்ளனர்.
மன்னார் மாவட்டம் முழுவதும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் தொடர்ச்சியாக பொதுமக்கள் காத்திருக்கின்ற மை குறிப்பிடத்தக்கது.






