ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளது – முன்னாள் பிரதமர் தெரிவிப்பு

உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து உலக வங்கி எச்சரித்துள்ள நிலையில் இது 2024 வரை நீடிக்கும் நிலையில் இது இலங்கையும் பாதிக்கும் என , எச்சரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“நாட்டில் எரிபொருள் மற்றும் உர நெருக்கடி நிலவுகிறது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது மற்றும் உலக வங்கி 2024 வரை உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் ஜாதிக சேவக சங்கமயா (ஜேஎஸ்எஸ்) ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டத்தில் ரனில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ரனில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மீள ஏற்படுத்துவதே நாட்டின் முன்னுரிமை என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைகளை சமாளிக்க ஏனைய நாடுகளின் உதவியையும் நாட வேண்டும்.

பாராளுமன்றம் அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக 20 குழுக்களை அமைக்க நான் ஏற்கனவே முன்மொழிந்துள்ளேன். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான யோசனையும் உள்ளது. நானும் 20வது திருத்தத்திற்கு எதிரானவன். எவ்வாறாயினும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு எமது முன்னுரிமை இருக்கக் கூடாது. பொருளாதார நெருக்கடிக்கு நாம் தீர்வு காண வேண்டும்” என்று விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

“சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையுடன் முரண்பட்டுள்ளன. அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது இன்றியமையாதது. கூடுதலாக, இந்தோனேசியா போன்ற நாடுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வங்கித் துறை வீழ்ச்சியால் பொருளாதாரச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டன.

இந்தநிலையில் இலங்கை அவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்தி இங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரணமான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில் கொழும்பு நிலைமைகளைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் அமைச்சரவை மாற்றம் , தேசிய அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றியே பல்வேறு விதமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.