மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இதற்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.11 மணிக்கு செட்டிக்குளம், கெபித்திகொல்லேவ, கோமரன்கடவல மற்றும் நிலாவெளி ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.