-அம்பாறை நிருபர்-
தனது வீட்டு முற்றத்தில் வைத்து, யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் உள்ள வீடொன்றில், இன்று புதன்கிழமை அதிகாலை குறித்த சம்பவம் இடம் பெற்றது.
இச்சம்பவத்தில், அதே பகுதியை சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 48 வயது மதிக்கத்தக்க பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி எம்.எம்.பாத்திமா சாமிலாவின் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று, மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்த குடும்ப பெண்ணை, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இதே போல் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு காலில் முறிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

