சரத் கொங்கஹகே மற்றும் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோருக்கு விளக்கமறியல்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இந்த இரு சந்தேகநபர்களும் இன்று செவ்வாய்க்கிழமை புதுக்கடை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியில் அமர்த்தி, அதற்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 14.32 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.