கெசல்கமு ஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார ராஜநாயக்க தெரிவித்தார்.

நண்பர்களுடன் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இணைந்து நோர்வூட் கெசல்கமு ஓயாவின் நீராடிக் கொண்டிருந்த போதே தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.
நோர்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, நோர்வூட் அயர்வி தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவன் நீரில் மூழ்கியதைக் கண்ட அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
எனினும், அந்தப் பகுதி அதிக ஆழம் கொண்டதாக இருந்தமையால் அவர்களால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது

பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடுதல் பணியினை மேற்கொண்ட போதிலும் கைகூடவில்லை. காரணம் சில்வர்வலா பகுதி ஆழமானதாக இருப்பதால் காணாமல் போன மாணவரின் உடலைக் கண்டறிய நோர்வூட் பொலிஸார் கடற்படையின் உதவியை நாடினர்.

இதன்படி கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் ரங்கல முகாம் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை தேடிய நிலையில் பிற்பகல் 1 மணியளவில் சடலமாக மீட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

