தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அறிவித்தல்!

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் 18 மணிநேர நீர் வெட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நீர் வெட்டு மூலம் சேமிக்கப்பட்ட நீரானது, பிலியந்தலை மற்றும் பன்னிப்பிட்டிய பகுதிகளில் நீர் கிடைக்காத சுமார் 20,000 வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இதற்கிடையில், இன்று இரவு 8.00 மணி முதல் நாளை மதியம் 2.00 மணி வரை கொழும்பு பெலன்வத்தை பகுதியில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் 3 மணிநேர நீர் வெட்டு தொடர்ந்து இடம்பெறும்.

எவ்வாறாயினும், புத்தாண்டு காலமான ஏப்ரல் 11 முதல் 14 ஆம் திகதி வரை எந்தப் பகுதியிலும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உறுதியளித்துள்ளது.

மேலும், ஹோமாகம பகுதியில் நேற்று இரவு 8.00 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட 18 மணிநேர நீர் வெட்டு இன்று மதியம் 2.00 மணி வரை அமுலில் இருந்தது.