மியன்மாரில் இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஜனாதிபதியாக பதவியேற்றார்

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லைங், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.

இராணுவத்திற்கு ஆதரவான USDP கட்சி மற்றும் இராணுவ உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ளனர்.

இதனால், இந்தத் தேர்தல் ஒரு நியாயமான வாக்கெடுப்பைக் காட்டிலும் மின் ஆங் ஹ்லைங்கிற்கான “முடிசூட்டு விழாவாகவே” பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி பதவியை ஏற்பதற்காக அவர் இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, மிகக் கடுமையான போக்கைக் கொண்ட ஜெனரல் யே வின் ஓ புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவில் மற்றும் இராணுவ விவகாரங்களில் உச்ச அதிகாரத்தைச் செலுத்தக்கூடிய புதிய ‘ஆலோசனைச் சபை’ ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சீருடையைக் களைந்தாலும், அதிகாரம் அவர் வசமே இருப்பதை உறுதி செய்துள்ளார்.

2021 புரட்சிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டங்களை இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. இது ஒரு பாரிய உள்நாட்டுப் போராக உருவெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது.

மியன்மாரின் பொருளாதாரம் தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 16 மில்லியன் மக்கள் உயிர் காக்கும் உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, மியன்மாரில் 90 வீதம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலையேற்றம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

காடுகளில் இருந்து இயங்கும் தேசிய ஒற்றுமை அரசாங்கம், இந்த புதிய ஆட்சியை சட்டவிரோதமானது என நிராகரித்துள்ளதுடன், இராணுவ ஆட்சிக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது.

தற்போது 80 வயதாகும் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகி விடுவிக்கப்பட்டால் மட்டுமே, மியன்மாரில் ஒரு சமரசப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.