ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா விஜேநாயக்கவை கைது செய்ய திறந்த பிடியாணை

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம், இன்று தனது தீர்மானத்தை அறிவித்து இந்த பிடியாணைகளை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை இலங்கையின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகை தந்தால் அவர்களைக் கைது செய்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் கட்டளையிட்டார்.