நீர் வெட்டு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபையின் பொது முகாமையாளர் (மேற்கு மத்திய) திஸ்னா பன்னில தெரிவித்தார்.

இதற்கமைய, பாதுக்கை பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 8.00 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதன் பின்னர் அப்பகுதிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நீர் விநியோகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி பாதுக்கைக்கான நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

ஹோமாகம பகுதியில் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் 4 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அந்தப் பகுதிக்கும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திஸ்னா பன்னில தெரிவித்தார்.

பெலன்வத்தை பகுதியில் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் 5 ஆம் திகதி இரவு 8.00 மணி வரை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன் பின்னர் நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து நீர் விநியோகிக்கப்பட்டு, மீண்டும் 9 ஆம் திகதி அந்த வலயத்திற்கான நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.