மட்டு.நாவற்குடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில், நேற்று வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி, ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

​விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடன் பயணித்த மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, பின்னால் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர் கத்தார் நாட்டில் தொழில் புரிந்து வந்தவர் என்பதுடன், விடுமுறைக்காகத் தாய்நாடு வந்திருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது விடுமுறையை முடித்துக்கொண்டு, மீண்டும் கத்தார் செல்லவிருந்த நிலையில், விபத்து அவரது உயிரைப் பறித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன, உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.