
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை
இன்று வியாழக்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென் மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் காலையில் மழை பெய்யக்கூடும்.
அதிகாலை நேரங்களில் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
