உதய கம்மன்பில நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்வு ‘ராஜபக்சக்களை வெள்ளையடிக்கும்’ ஒரு முயற்சி – நவின் திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்வை, “ராஜபக்சக்களை வெள்ளையடிக்கும்” ஒரு முயற்சி என, முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க விமர்சித்துள்ளார்.

தன்னுடைய சமூக ஊடகமொன்றில் பதிவொன்றை இட்டுள்ள முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க,

“உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார். ஆனால், கம்மன்பிலவால் அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த சஹ்ரான் ஹாஷிம்” என நவின் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வை நேற்று நடத்தியிருப்பது பொருத்தமற்றது, இதை “முட்டாள்கள் தினமான இன்று” நடத்தியிருக்க வேண்டும், என முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, தலதா அத்துகோரள உட்பட பல எதிர்க்கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.