
கிரிக்கெட் வீரரின் தங்கச் சங்கிலியை அடகு வைத்த விவகாரத்தில் சந்தேகநபரான நடிகைக்கு பிணை
கிரிக்கெட் வீரர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளம் நடிகை ஒருவரை கடுவலை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த தங்கச் சங்கிலியைத் தன்னிடம் பெற்றுக்கொண்ட நடிகை, தனது அனுமதியின்றி அதனை அடகு வைத்து சுமார் 6 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக அந்த கிரிக்கெட் வீரர் தலங்கம பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த முறைப்பாடையடுத்து தலங்கம பொலிஸ் குற்றப்பிரிவினரால் நேற்று அந்த நடிகை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நடிகை நேற்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த தங்கச் சங்கிலி அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டு மனுதாரரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல சந்தேகநபருக்கு பதில் நீதவான் அனுமதி வழங்கினார்.
