
லெபனானில் இந்தோனேசிய ஐ.நா அமைதிப்படை வீரர் உயிரிழப்பு!
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நிலைகளில் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானதில், அந்தப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஐநா அமைதிப்படையின் கீழ் பணியாற்றிய தமது இராணுவ வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டதையும், மேலும் மூவர் காயமடைந்துள்ளதையும் இந்தோனேசியா உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இந்த குழுவினர் பாதிக்கப்பட்டதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உயிரிழப்பினால் நாம் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, உயிரிழந்த அமைதிப்படை வீரருக்கு எமது உயரிய மரியாதையை செலுத்துகிறோம் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தோனேசியா இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
