விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவு நுவரெலியா த .ம .வித்தியாலயத்திற்கான புதிய கணனி மையம் கையளிக்கப்பட்டது

விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் கையளிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி , விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்காவின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக, அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் சனிக்கிழமை பாடசாலைக்காக கையளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஒரு நவீன தொழில்நுட்பக் கற்றல் சூழலை வழங்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது . குளிரூட்டப்பட்ட இந்தப் புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தில் 15 மேசைக்கணினிகள் அமைப்புகளுடன் இணைய வசதிகள் அடங்கலாக அமைக்கப்பட்டுள்ளன. இது பாடசாலை மாணவர்கள் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி கற்பதற்கான வாய்ப்பை அதிகாரிகரிக்கும் .

இத்திட்டத்திற்கு அலெங்கோ அறக்கட்டளை ( Alengko Foundation ) மற்றும் ஆஸ்திரேலியா, ஜெர்மனியில் உள்ள இலங்கைச் பிரஜைகள் நிதியுதவி அளித்தனர் . மேலும் இதன் கட்டுமானப் பணிகள் இலங்கை விமானப்படையின் பிதுருத்தலகல நிலையத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

கணினி வளாகத்தின் திறப்பு விழாவில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பொறியியல் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் அசிதா ஹெட்டி ஆராச்சி, தகவல் தொழில்நுட்பப் பணிப்பாளர், குரூப் கேப்டன் சனக சூரியராச்சி, பிதுருத்தலகல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் சிந்தக ஜயசுந்தர, விமானப்படை அதிகாரிகள், அலெங்கோ அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.