சுவிஸ் : 12 தொன் “கிட்கேட்” சாக்லேட் லொறியுடன் திருடப்படடுள்ளது

ஐரோப்பாவில் 12 தொன் கிட்கேட் சாக்லேட் லொறியுடன் திருடப்படடுள்ளதாக சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே தெரிவித்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு இடம்பெற்றுள்ள இச்சம்பவமானது விற்பனை நிலையங்களில் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

எங்களின் புதிய வகை சாக்லேட்டுகளில் 413,793 அலகுகளை ஏற்றிச் சென்ற ஒரு லொறி திருடப்பட்டது என்று நெஸ்லே ஏஎப்பி(AFP) க்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது. சுமார் 12 தொன் எடையுள்ள சரக்கு, கடந்த வாரம் உற்பத்தி மற்றும் விநியோக மையங்களுக்கு இடையே பயணித்தபோது காணாமல் போனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், “இந்தத் திருட்டு கடைகளில் கிட்கேட் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்துள்ளது.

திருடப்படுவதற்கு முன்பு லொறி மத்திய இத்தாலியில் இருந்து புறப்பட்டு, தான் கடந்து செல்லும் நாடுகளில் விநியோகிக்கும் நோக்கத்தில் போலந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பொருட்கள் எங்கு காணாமல் போயின என்பதை கிட்கேட் துல்லியமாகக் குறிப்பிடவில்லை, ஆனால் “அந்த வாகனத்தையும் அதன் உள்ளடக்கங்களையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளது.

காணாமல் போன சாக்லேட் பார்கள் ஐரோப்பிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமற்ற விற்பனை வழிகளில் நுழையக்கூடும் என்று அது எச்சரித்தது. ஒவ்வொரு பாரிலும் உள்ள பார்கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் திருடப்பட்ட பொருட்களைக் கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.