
தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் – பிரதி அமைச்சர்
-மஸ்கெலியா நிருபர்-
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில், மலையகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளை புனரமைக்கும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஹப்பகஸ்தென்ன தோட்ட வைத்தியசாலையும் புனரமைப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 45 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு பணிகளை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தயலிங்கம் பிரதீப், மேற்பார்வை செய்தார்.
தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்ளும் வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்கள் மற்றும் ஏனைய வசதிகளை வெகு விரைவாக பெற்றுக் கொடுப்படுதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளது என்றும் இதன்போது பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.




