வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது
வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம், மக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக இன்று வெள்ளிக்கிழமை, திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.எம்.முகமட் ராஷிக் ஏற்பாட்டில், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.ரதீப் அகமட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி எ.எச்.எம்.றியாழ், மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ஐ.பயாஸ் றஸ்ஸாக், மட்டக்களப்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி மதுஞ்சலா கேதீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு சட்டத்தரணி சங்கத் தலைவர், சட்டத்தரணிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், சிறைச்சாலை அத்தியட்சகர், மாவட்ட செயலாளர், கணக்காளர், பிரதேச சபை செயலாளர்கள், நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த காலத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் நீதிமன்ற கட்டடம் இயங்கி வந்த நிலையில், இவ் நீதிமன்றம் கட்டடம் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேல் நீதிமன்ற நீதிபதி, சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிபதி ஆகியோரினால் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு, வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் வரவேற்புரையும், தலைமை உரையும் இடம்பெற்றதுடன், நீதி அமைச்சரினால் இணையவழி ஊடான உரை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் விசேட உரை நிகழ்த்தப்பட்டதுடன், கல்குடா சட்டத்தரணி சங்க தலைவரின் நன்றி உரையுடன் திறப்பு விழா நிகழ்வுகள் நிறைவு பெற்று, புதிதாக திறந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றது.

