
கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் விசேட அணிவகுப்பு மரியாதை மற்றும் வாகனப் பரிசோதனை
கந்தளாய் பொலிஸ் நிலையத்தில், பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பொலிஸ் நிலையப் பிரிவுகளின் பரிசோதனை நடவடிக்கைகள், இன்று வெள்ளிக்கிழமை காலை, மிக விமர்சையாக இடம்பெற்றன.
திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கௌரவ அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது, இதனை திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக்க மற்றும் கந்தளாய் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஜ்ஜீவ பண்டார ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
அணிவகுப்பைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தின் நிருவாகக் கோப்புகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடை ஒழுங்குமுறை மற்றும் கடமை நேர ஒழுக்கம் குறித்து உயரதிகாரிகளினால் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ வாகனங்களின் பராமரிப்பு நிலை மற்றும் இயந்திரத் தரம் என்பனவும் இதன்போது நேரில் சென்று பரிசோதிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஏனைய பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனுடன் முன்னெடுப்பதையும், பொலிஸ் திணைக்களத்தின் ஒழுக்கக் கோவையை உறுதிப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டே இவ்வாறான வருடாந்த பரிசோதனைகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
