சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட உயிருள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் மலர்ச் செடிகள்

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து, இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில், உயிருள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் மலர்ச் செடிகளை, பயணப் பொதிகளுக்குள் மறைத்து எடுத்துவர முயன்ற இருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 25 ஆம் திகதி, பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த, TG307 ரக விமானத்தில், சட்டவிரோமதமாக, 26 உயிருள்ள விலங்குகள் மற்றும் 16 பறவைகளை கொண்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து முள்ளம்பன்றிகள், அணில்கள், கினிப் பன்றி (Guinea Pig) ரக எலிகள் மற்றும் விசேட புறா இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் 19 ஆம் திகதி, பாங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த UL 403 ரக விமானத்தில், 23 உயிருள்ள விலங்குகள் மற்றும் 11 மலர்ச் செடிகள் கொண்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து முள்ளம்பன்றிகள், அணில்கள் மற்றும் ஹாம்ஸ்டர் (Hamster) ரக எலிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் இந்தச் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இலங்கை சுங்கத்தின் உயிரினப் பன்முகத்தன்மை, கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின், சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு பாரிய அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.