மட்டக்களப்பில் அரங்கேறிய கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்!

​மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பகுதியில், மயக்க மருந்து கொடுத்து, பெண்களைக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றில் வீசிக் கொலை செய்த கும்பலுக்கு, கடும் தண்டனை வழங்கக் கோரியும், உயிரிழந்த நளாயினி என்பவருக்கு நீதி கோரியும், இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் பாரிய மக்கள் போராட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது.

வெல்லாவெளி 40-ம் கிராமத்தைச் சேர்ந்த, நனாயினி ரவி (வயது 48) என்ற தாய், பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

​இன்று காலை 8.30 மணியளவில், மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கறுப்புப் பட்டிகளை அணிந்தும், சுலோகங்களை ஏந்தியும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதை தொடர்ந்து, காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பித்த பேரணி, பஸார் வீதி வழியாக நீதிமன்ற வீதியைச் சென்றடைந்து, அங்கிருந்து மாவட்டச் செயலகத்தை (பழைய கச்சேரி) நோக்கிச் சென்றது.

இதன்போது, அங்கு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், பொலிஸார் பஸ் வண்டிகளைக் குறுக்கே நிறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்தனர்.

இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இதனையடுத்து, அரசாங்க அதிபர் தலையிட்டு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் பிரதிநிதிகள் சிலர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு, மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், அமைச்சருமான சுனில் ஹந்திநெத்தியிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும் தவிசாளர்கள் பங்கேற்றனர்.

​மக்களைச் சந்தித்த அமைச்சர், இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

​இக்கொடூரச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பைக் கண்டறிய, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் சந்தேகநபர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.