மட்டக்களப்பை அதிர வைத்த கொலை சம்பவத்தில் தொடரும் பொலிஸாரின் தேடுதல் வேட்டை!

​மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து செலுத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு, கிணற்றில் வீசி கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புடைய, மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை, கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.



கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலிலும், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் மேற்பார்வையிலும், குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த அதிரடி விசாரணையை முன்னெடுத்தனர்.

​பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும், நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்து ஸ்பிரே போத்தல் ஒன்றும், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

காஞ்சிரம்குடா பகுதியில் உள்ள கொள்ளையர்களின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், சுமார் இரண்டு அடி ஆழத்தில், பொலித்தீன் பைகளில் சுற்றிப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் 6 மயக்க மருந்து போத்தல்கள், மாத்திரைகள் மற்றும் ஏனைய மருந்துப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, பெருந்தொகை பணம் கொடுத்து இவை பெறப்பட்டதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

அதே கிணற்றிலிருந்து, ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் மட்டக்களப்பு மக்கள் மத்தியில், பெரும் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொடூரச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்ததாகக் கருதப்படும் இருவர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இக்கொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில், கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றதுடன், குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது