பொத்துவில் கனகர் கிராமத்தில் புதிய வீடுகள் கையளிப்பு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

​பொத்துவில், 60ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள கனகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் உத்தியோகபூர்வ திறப்பு விழா கனகர் கிராம மக்களின் சிறப்பான ஏற்பாட்டில் புதன்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது.

அதிதிகள் வரவேற்பு இடம்பெற்றதனைத் தொடர்ந்து புதிய வீடுகள் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

அடுத்து ​வரவேற்புரை மற்றும் தலைமையுரையைத் தொடர்ந்து, கிராமிய கலை கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகள் அரங்கேறின.
​விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

​வீடுகளைக் கையளித்த பின்னர், நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறிப்பாக, மீள் குடியேற்றக் கிராம மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், குடிநீர் மற்றும் வீதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர்.

​​இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.ஸ்ரீநேசன், க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.