
ரயில் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் : அரசாங்கத்திடம் கோரிக்கை!
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், ரயில் கட்டணங்களை எவ்விதத்திலும் அதிகரிக்க வேண்டாம் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பேருந்து கட்டண உயர்வு காரணமாக, பெருமளவிலான மக்கள் தற்போது ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.
மத்திய கிழக்கு போர் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை இலங்கையிலும் போக்குவரத்து மற்றும் சேவைக்கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
பொதுமக்களுக்குக் குறைந்த செலவில் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டிய விசேட பொறுப்பு ரயில் திணைக்களத்திற்கு உள்ளது எனச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ரயில் சேவையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதியிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய இக்கட்டான சூழலில் ரயில் கட்டணங்களை உயர்த்துவது பொதுமக்களை மேலும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் என சங்கம் எச்சரித்துள்ளது.
