கென்யாவில் தொடரும் கனமழையால் பாரிய வெள்ளம் : 88 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் கடந்த 6ஆம் திகதி முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நைரோபி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, தற்போது மேற்கு கென்யாவிலுள்ள நயான்டோ (Nyando) மற்றும் தானா (Tana) ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதுவரை 34,000க்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி முதல் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால், மீட்புப் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள கென்ய அரசாங்கம், தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.