
“இது வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல நட்டத்தினால் ஏற்பட்ட விலகல்”
பேருந்து சேவைகளிலிருந்து இன்று திங்கட்கிழமை விலகியமை ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல, என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், பழைய கட்டணத்தின் கீழ் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் நேற்று முதல் புதிய கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்தியிருக்க முடியும் என்றும், அவ்வாறு செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினம் 90 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்த அவர், எவருக்கும் அழுத்தம் கொடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், ஒரு சில பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும், ‘சிசு செரிய’ பாடசாலை பேருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன,
“இதனை ஒரு வேலைநிறுத்தப் போராட்டமாக நாம் கூறவில்லை. நட்டத்தை ஈடுகட்ட முடியாததால் சேவையிலிருந்து விலகியுள்ளோம். குறுகிய தூர சேவைகளுக்கு 5,000 முதல் 6,000 ரூபா வரையிலும், நீண்ட தூர சேவைகளுக்கு 15,000 முதல் 20,000 ரூபா வரையிலும் நட்டம் ஏற்படுகிறது. எவரும் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். இது ஒரு தொழில். கடந்த காலங்களில் எரிபொருள் விலை உயர்ந்தவுடன் அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடினர். ஆனால் இம்முறை எவ்வித பேச்சுவார்த்தையும் இன்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் அமைச்சும் செயற்பட்டுள்ளன. எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு ஒரு சிறிய சமிக்ஞையை வழங்கியுள்ளோம்.” என தெரிவித்தார்.
