தபால் பரிமாற்றங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இடம்பெறும்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து சேவைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, தபால் நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் வருமாறு,

நாடு முழுவதுமுள்ள தபால் பரிமாற்றங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரமே நடைபெறும்.

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தபால் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும்.

தபால் திணைக்கள வாகனங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட சேவையால், தபால் விநியோகத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும்.

மேலும், மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டுத் தபால் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வரும் தபால்கள் வழமை போல் கிடைப்பதில்லை என்பதுடன், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்களும் பாரிய தாமதத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர ஏனைய நாட்களில் தபால் அலுவலகங்கள் திறந்திருக்கும்.

எனவே, பொதுமக்கள் தங்களது தபால் பொருட்களைத் தபால் அலுவலகங்களில் ஒப்படைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.