மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து கேட்ட அலறல் சத்தம் : கிணற்றினுள் சடலங்கள்?

வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு, நேற்று வியாழக்கிழமை, இரண்டரை வயது குழந்தையுடன் சென்று காணாமல் போன இளம் தாய், தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும், குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் உயிருக்கு போராடிய நிலையிலும், இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த, 27 வயதுடைய இளம் தாய் ஒருவர், அவரது இரண்டரை வயது குழந்தைக்கு சுகயீனம் காரணமாக மருந்து எடுப்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்காக, நேற்று வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

அதன்பின்னர், அவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் அவரை தேடி அலைந்து கண்டுபிடிக்க முடியாமல் போனதையடுத்து, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில், சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில், மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் இருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.

இதனையடுத்து, பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு குறித்த பெண் மீட்கப்பட்ட போது, கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட பெண்ணை, பொலிஸார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில், கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில், மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது

குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து, சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்த கிணற்றில் இருந்தே குழந்தையின் தாய் மீட்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, பொலிசார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தனது குழந்தையுடன் சென்று குழந்தையின் சுகயீனத்திற்கு மருந்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகை அடகு வைக்கும் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். குறித்த கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டிருந்த அவரது தங்க நகையை மீட்டு எடுத்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்தில் ஏறியுள்ளார். அதன்பின் வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்குசெல்ல தாண்டியடி பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கி தனது வீடு நோக்கி சென்றதாகவும் அதன்பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு நினைவில்லை என்றும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் இச்சம்பவத்தால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு, பயந்த நிலையில் இருப்பதால் அவரிடமிருந்து மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிசார் மாவட்ட புலனாய்வு பிரிவினர் இணைந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.