வார இறுதியில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது!

இலங்கையில் QR முறையின் கீழ் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்கள் அடிப்படையில் எரிபொருள் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் எதிர்வரும் வார இறுதியில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் எரிபொருள் நிரப்பு முனையங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPSTL) அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான கையிருப்பு பராமரிக்கப்படுகிறது .

இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தமது வினியோகம் நிறுத்தப்படுவதால் வார ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போதிய கையிருப்பைப் பேணுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) அன்று காசோலைகள் மற்றும் ‘வினியோகம் செய்யும் போது பணம் செலுத்தும்’ (COD) வசதிகள் எரிபொருள் நிரப்பு முனையங்களுக்கு தடையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (மார்ச் 23) தேவையான எரிபொருள் கட்டளைகளை இன்றே சமர்ப்பிக்குமாறும், காசோலைகளை உரிய பிரிவினரிடம் முன்கூட்டியே ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நடைமுறை மூலம் வார இறுதி விடுமுறைக்குப் பின்னர் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்க்க முடியும் என கூட்டுத்தாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.