தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த ஓய்வுபெற்ற சாரதி கைது!

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் உத்தியோகபூர்வ வாகன ஓட்டுநர் விடுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற சாரதி ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பாலித நந்தசிறி தலைமையிலான குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விடுதியின் சமையலறையில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்பட்டு, நண்பர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சோதனையின் போது 50,000 மில்லிலீற்றர் கோடா மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் 65 வயதுடைய ஓய்வுபெற்ற சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.