ஈரானின் “மூளை” (அலி லரிஜானி) போரில் சாய்க்கப்பட்டது!!

ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமனேயி கொல்லப்பட்ட பிறகு, மிக முக்கியமான பிரமுகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அலி லரிஜானி (Ali Larijani), நாட்டின் மிகப்பெரிய அதிகார மையமாக உருவெடுத்தார்.

ஆனால், இப்போது அவரும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்து விட்டார், என்பதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மார்ச் 18 இரவு, அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நிகழ்த்திய தாக்குதலின் போது, 67 வயதான அலி லரிஜானி உயிரிழந்துள்ளதாக, இஸ்ரேல் அறிவித்தது.

அலி லரிஜானி ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக இருந்தவர். இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் அல்-குத்ஸ் தின பேரணியில் பொதுமக்கள் முன் அவர் தோன்றினார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் நாள் போரின் போது, நிகழ்ந்த ஆயத்துல்லா அலி கமனேயின் உயிரிழப்புக்கு பின்னர், இந்த போரில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரானிய உயர்மட்ட அதிகாரி அலி லரிஜானி ஆவார்.

இவர் பல ஆண்டுகளாக ஈரான் வர்த்தக அமைப்பின் அமைதியான, நடைமுறைவாத முகமாக இருந்தவர். மேலும் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜெர்மன் தத்துவஞானி இம்மானுவேல் கான்ட் பற்றி பல புத்தகங்களை எழுதியதோடு, மேற்கத்திய நாடுகளுடன் அணு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமனேயி கொல்லப்பட்ட பின்னர்,
“அமெரிக்காவும், ஜியோனிஸ்ட் ஆட்சியும் (இஸ்ரேல்) ஈரான் மக்களின் இதயத்தை தீக்கிரையாக்கியுள்ளன. நாங்கள் அவர்களின் இதயத்தை எரிப்போம். ஜியோனிஸ்ட் குற்றவாளிகளையும் அமெரிக்கர்களையும் தாங்கள் இழைத்த அநீதிகளை நினைத்து வருந்தச் செய்வோம். ஈரானின் வீரர்களும் மக்களும் சர்வதேச அடக்குமுறையாளர்களுக்கு மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்” என்று அலி லரிஜானி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இஸ்ரேல் சூழ்ச்சியில் விழுந்துவிட்டார்” என்று லரிஜானி குற்றம் சாட்டினார்.

1979 புரட்சிக்குப் பிறகு, ஈரானுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் ஆட்சி அமைப்பின் முக்கிய இடத்தில் இருந்துள்ளார் லாரிஜானி. உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமனேயியின் மரணத்தின் பின்னர், நாட்டை வழி நடத்திய மூன்று பேர் கொண்ட இடைக்கால கவுன்சிலுடன் அவர் முக்கிய பங்காற்றினார்.

இவ்வாறு ஈரானின் பாதுகாப்பு வியூகத்தை வழிநடத்திய லாரிஜானி யார்?
……………………..

1958 ஜூன் 3 ஆம் திகதி, ஈராக்கின் நஜாஃபில் பிறந்த லரிஜானி, ஈரானின் அமோல் (Amol) நகரத்தைச் சேர்ந்த பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். 2009 இல் டைம் சஞ்சிகை (Time Magazine) லரிஜானியின் குடும்பத்தை “ஈரானின் கென்னடிகள்” என்று குறிப்பிட்டிருந்தது. அவரது தந்தை மிர்ஸா ஹாஷிம் அமோலி புகழ்பெற்ற மத அறிஞர். அவரது சகோதரர்களும் நீதித்துறை, நிபுணர்கள் சபை போன்ற உயர் பதவிகளில் இருந்தனர்.

1979 புரட்சிக்குப் பிறகு, தனது 20 வயதில் லரிஜானி இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் ருஹொல்லா கோமெய்னியின் நெருங்கிய நண்பர் மொர்தேஜா மொதஹரியின் மகள் ஃபரிதா மொதஹரியைத் திருமணம் செய்துகொண்டார்.

அவரது குடும்பம் பழமைவாத மதப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், அவரது பிள்ளைகளின் வாழ்க்கைப் பாதை பன்முகத்தன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளது. மகள் ஃபாத்திமா, தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து, அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் சிறப்புப் பயிற்சி முடித்துள்ளார்.

கணிதவியலாளரும் தத்துவஞானியுமான அலி லரிஜானி
……………………..

எல்லோரையும் போல் லரிஜானி மதப் பள்ளிகளில் மட்டும் படிக்கவில்லை. 1979 இல் அவர் ஷெரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் மேற்கத்திய தத்துவத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை முடித்த அவர், ஜேர்மன் நாட்டு தத்துவஞானியான இம்மானுவேல் கான்ட்டைப் (Immanuel Kant) பற்றி தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.

1979 புரட்சிக்குப் பிறகு, 1980-களின் முற்பகுதியில் அவர் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் (IRGC) சேர்ந்தார். பின்னர் அரசாங்கத்திற்கு மாறி, 1994 முதல் 1997 வரை ஜனாதிபதி அக்பர் ஹஷேமி ரஃப்ஸஞ்சானியின் கீழ், கலாச்சார அமைச்சராகவும், அதன் பிறகு 1994 முதல் 2004 வரை அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB-ன் தலைவராகவும் பணியாற்றினார். IRIB-ல் அவர் பணியாற்றிய காலத்தில், அவரது கட்டுப்பாடான கொள்கைகள் காரணமாக சீர்திருத்தவாதிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

2008-2020 வரை மூன்று முறை பாராளுமன்ற சபாநாயகராக இருந்து உள்நாட்டு-வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்தார்.

பாதுகாப்புத் துறைக்கு திரும்பிய அலி லரிஜானி
……………………..

அலி லாரிஜானி 2005 இல் வேட்பாளராக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. அதே வருடம் அவர் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளராகவும், நாட்டின் தலைமை அணுசக்திப் பேச்சுவார்த்தையாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அப்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் அணுசக்திக் கொள்கைகளிலிருந்து விலகிய அலி லாரிஜானி, 2007 இல் அந்தப் பதவிகளிலிருந்தும் விலகினார்.

லாரிஜானி 2008 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி சபாநாயகரானார். இது அவரது செல்வாக்கை அதிகரிக்க உதவியது, மேலும் அவர் அணுசக்தி விவகாரத்துடனான தனது தொடர்பைத் தக்கவைத்துக்கொண்டு, ஈரான் மற்றும் உலக வல்லரசுகளுக்கு இடையேயான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றார்.

இந்த ஒப்பந்தம் கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படுகிறது.

2020 இல் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகிய பிறகு, லாரிஜானி 2021 தேர்தலில் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முயன்றார். ஆனால் இந்த முறை, வேட்பாளர்களைத் தகுதி ஆய்வு செய்யும் கார்டியன் கவுன்சிலால் (Guardian Council) அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயன்றபோதும் அவர் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தத் தகுதி நீக்கங்களுக்கான காரணத்தை கார்டியன் கவுன்சில் தெரிவிக்கவில்லை.

ஆனால் 2021 இல் நடந்த இந்த நடவடிக்கையை, தேர்தலில் வெற்றி பெற்ற கடும்போக்காளர் இப்ராஹிம் ரைசிக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்கான ஒரு வழியாகவே ஆளும் வர்க்கம் கருதியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

2024 இல் நடந்த இந்தத் தகுதி நீக்கத்தை, லாரிஜானி “வெளிப்படையற்றது” என்று விமர்சித்தார்.

ஆனால், 2025 ஆகஸ்டில் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனால் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் என்ற செல்வாக்குமிக்க பதவிக்கு லாரிஜானி மீண்டும் நியமிக்கப்பட்ட பின்னர், 2025 ஒக்டோபரில் IAEA உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

கடுமையான நிலைப்பாடு இருந்தபோதிலும், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் அவர் ஆற்றிய கடந்தகாலப் பங்கின் காரணமாக, லாரிஜானி பெரும்பாலும் யதார்த்தவாதியாகவும், ஈரானிய அமைப்புக்குள் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்கக்கூடிய ஒருவராகவும் கருதப்பட்டார்.

தற்போதைய போர் பதற்றம் அதிகரிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, லாரிஜானி அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பெப்ரவரியில், ஓமானின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, வொஷிங்டனிடமிருந்து தெஹ்ரான் ஒரு குறிப்பிட்ட முன்மொழிவைப் பெறவில்லை என்றும், “ஒரு போரைத் தூண்டுவதற்காக” இராஜதந்திரப் பாதையைச் சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், அவர் குற்றம் சாட்டினார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முன்பு, அல் ஜசீராவுக்கு அளித்த நேர்காணலில் லாரிஜானி பேச்சுவார்த்தைகள் குறித்த தனது நாட்டின் நிலைப்பாட்டை “நேர்மறையானது” என்று விவரித்தார். இராணுவ நடவடிக்கை சாத்தியமில்லை என்பதை அமெரிக்கா உணர்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் “பேச்சுவார்த்தையை நாடுவதே ஒரு பகுத்தறிவுமிக்க வழி”, என்றும் அவர் அப்போது கூறினார்.

இருப்பினும், அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள், இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை தகர்த்துவிட்டன.

அரசியலமைப்பின்படி தலைமைப் பதவி மாற்றத்தை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்கள் தயாராக இருப்பதாக லாரிஜானி நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். மேலும் “தலைவர்களைக் கொல்வது ஈரானை நிலைகுலையச் செய்யும் என்று நினைப்பது ஒரு மாயை”, என அவர் அமெரிக்காவை எச்சரித்தார்.

“நாங்கள் பிராந்திய நாடுகளைத் தாக்க எண்ணவில்லை, ஆனால் அமெரிக்கா பயன்படுத்தும் எந்தத் தளங்களையும் நாங்கள் கண்காணிப்போம்” என்று அவர் கூறினார். அவருடைய யதார்த்தமான தொனி பின்வாங்குவதாக தோற்றமளித்தது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தைகளை அவர் விரும்புவதாக வந்த ஊடகச் செய்திகளை லாரிஜானி நிராகரித்தார், ஈரான் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, என்றும் தெரிவித்தார்

மாறாக, கடந்த மார்ச் 5 ஆம் திகதி தரைப்படைகளை அனுப்புவதை நிராகரிக்க டிரம்ப் மறுத்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, “அமெரிக்கப் படைகள் நாட்டிற்குள் நுழைந்தால் அவர்களைப் பிடித்துக் கொல்வதாக” லாரிஜானி சபதம் செய்தார்.

“இமாம் கமேனி மற்றும் இமாம் கமேனியின் வீரம் மிக்க புதல்வர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள், ஆயிரக்கணக்கானோரைக் கொன்று பிடிப்பதன் மூலம் அந்த ஊழல் அமெரிக்க அதிகாரிகளை அவமானப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்”, என்றும் அவர் எச்சரித்தார்.

மார்ச் 13 ஆம் திகதி, தலைநகர் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகள் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் லாரிஜானி, பெஷேஷ்கியன் மற்றும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து அல்-குட்ஸ் தினத்தைக் குறிக்கும் வகையில் தெஹ்ரான் வீதிகளில் இறங்கி, அந்தத் தாக்குதலை எதிர்கொண்டு மீண்டு எழும் ஆற்றலின் பிம்பத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை, லரிஜானி தனது எக்ஸ் கணக்கில் பதிவொன்றில், போர் குறித்து மௌனம் காக்கும் முஸ்லிம் நாடுகளை கண்டித்தார்.

“ஒரு முஸ்லிமின் அழுகுரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை என்றால், நீங்கள் ஒரு முஸ்லிமே அல்ல, இது என்ன வகையான இஸ்லாம்?” என்று அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்

கடந்த வாரம், லாரிஜானி, புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி மற்றும் பிற உயர் அதிகாரிகள் உலகளாவிய ‘பயங்கரவாதத்தை’ இயக்குவதாகக் குற்றம் சாட்டி, அவர்களைப் பற்றிய தகவல் வழங்குவோருக்கு 10 மில்லியன் டொலர் வரை வெகுமதி வழங்கப்படும் என, அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.

பாதுகாப்பு அமைப்பு, இராணுவத் துறை மற்றும் அரசியல் ஸ்தாபனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பாலமாக லாரிஜானி கருதப்படுவதாக, தெஹ்ரானில் இருந்து செய்தி வழங்கும் அல் ஜசீராவின் தோஹித் அசாதி தெரிவித்தார்.

அலி லரிஜானியின் இழப்பு ‘முக்கியமானது’ என்று விவரித்த தோஹித் அசாதி, இது ஈரானில் மூலோபாய முடிவெடுப்பதில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

“கமெனி கொல்லப்பட்ட பிறகு மூலோபாய முடிவெடுப்பதில் அலி லரிஜானி ஒரு முக்கியப் பங்காற்றினார்”, என்று அசாதி கூறினார்.

“ஈரானிய அரசியல் மற்றும் இராணுவ அமைப்புக்குள் பின்னடைவுகள் இருந்தபோதிலும், அது தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. ஆனால் லாரிஜானி போன்ற ஒருவருக்கு மாற்றைக் கண்டுபிடிப்பது எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

“”ஏற்கனவே மிகவும் சிக்கலான இந்தச் சூழலில், போரைக் கட்டுப்படுத்துவதிலும், பதற்றத்தைத் தணிப்பதற்கான சாத்தியமான நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிப்பதிலும் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவராக அலி லாரிஜானி இருந்தார்””

(Al Jazeera)