கம்மன்பில வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பதை, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப்போவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

சுமார் ஒன்றரை வருடங்களாகத் தான் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டறிதல்’ (Finding the Mastermind of the Easter Sunday Attacks) என்ற தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த ஆய்வு நூல், மார்ச் 31ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மந்திரத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது கடந்த ஏழு வருடங்களாக அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் தாக்குதலை வைத்து அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன. எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி இராணுவத்தினர் பழிவாங்கப்பட்டனர்.

இப்போது இந்த ஏமாற்று வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மார்ச் 31ஆம் திகதி நாங்கள் நாட்டுக்குத் தெளிவுபடுத்துவோம், என தெரிவித்துள்ளார்.