சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் -ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான காரின் சாரதி, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரோக்வுட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
காரை ஓட்டிச் சென்ற சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்திலிருந்த தோட்ட வீதிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த சாரதி, ஒரு பெண் உள்ளிட்ட மூவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஏனைய இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சாரதி மாத்திரம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதும், போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.


