கடும் வெப்பம் தொடர்பில் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் புதிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை, மன்னார், அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்ப அலைகள் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கான முக்கிய வழிகாட்டல்கள்:
முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த கடும் வெப்பம் குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
சிறு குழந்தைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
உடல் வெப்பத்தைத் தணிக்க வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான மெல்லிய ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தாகம் இல்லாவிட்டாலும் போதியளவு நீர் அருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
கடுமையான சூரிய ஒளியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் களைப்பு மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
